கொரோனாவுக்கு 6 பேர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேரும் இறந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 30,395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 215 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 26,348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சி அருகே அனையூரை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணும், வானூரை சேர்ந்த 77 வயதுடைய முதியவரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கோபால்கவுண்டர் தெருவை சேர்ந்த 51 வயது பெண்ணும், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே ஜி.அரியூரை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகையூரை சேர்ந்த 68 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரம் நேதாஜி நகரை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.
754 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக 754 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,149 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,015 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,913 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18,973 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 15,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 126 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண், 54 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோாின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 424 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.