கருப்பு பூஞ்சை தொற்று இல்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுவரை யாருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று இல்லை என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுவரை யாருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று இல்லை என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதலின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையின் பயனாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. முன்பு நாள்தோறும் 800 வரை தடுப்பூசி போட்டவர்கள் தற்போது 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். கடந்த 24-ந் தேதி 2 ஆயிரத்து 800 பேர் ஊசி போட்டுள்ளனர்.
அதே வேளையில் முன்பு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்படும். தற்போது அது 16 ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று சதவீதம் பாதியாக குறைந்து வருகிறது. அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதால் அதிக எண்ணிக்கை வருகிறது.
தொற்று பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை யாரும் கருப்புபூஞ்சை தொற்று காரணமாக பாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. இருப்பினும் இந்த தொற்று பாதிப்பு யாருக்காவது உள்ளதா என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கண்சிகிச்சை பிரிவில் கண் டாக்டர்கள் கூடுதல் நேரம் வெளிநோயாளிகளை பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள், மற்றும் மருந்துகள் ஓரிரு நாளில் வரஉள்ளது. வந்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி ஒரு பிளாக்கில் முழுமையாக முடிவடைந்து விட்டது. மற்றொரு பிளாக்கில் ஓரிருநாளில் முடிவடைந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வதந்தி
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் வரை கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை பெறுவதாகவும் அதில் ஒருவர் பலியாகி விட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது முற்றிலும் தவறான தகவல் யாரும் இறக்கவில்லை. மதுரையில் சிகிச்சை பெறுபவர் குறித்த விவரமும் மதுரையில்தான் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.