விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் தொடங்கி வைத்தனர்
விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம்,
கொரோனா நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 13 வட்டார மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஆர்வமுடன் முகாம் நடைபெற்ற இடத்திற்கு முக கவசம் அணிந்தபடி சென்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை பார்வையிட்டனர். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு 22,400 எண்ணிக்கையிலான கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 ஆயிரம் எண்ணிக்கையிலான கோவேக்சின் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளது. மேலும் அதிகப்படியான தடுப்பூசிகள் பெறப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிசெலுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஊராட்சிகளில் இயங்கும் ரேஷன் கடைகளில் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவி வைக்கப்படவுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் உடலின் ஆக்சிஜன் அளவினை பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புத்தன்மையுடையது. எனவே பொதுமக்கள் அனைவரும் அச்சப்படாமல் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மணிமேகலை, துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நிஷாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.