தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதி டீன் நேரு தகவல்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என டீன் நேரு தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-26 16:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று புதிய டீன் நேரு கூறினார்.
பொறுப்பேற்பு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீனாக பணியாற்றி வந்த ரேவதி பாலன் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டி.நேரு பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீனாக நியமிக்கப்பட்டு உள்ளார். 
அவர் புதிய டீனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நல்ல சிகிச்சை
தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். அனைவரது துணையுடன் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
இந்த பணியை சிறப்பாக மேற்கொள்வேன். ஏழை, எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட கலெக்டர் மற்றும் முன்பு ஆஸ்பத்திரியில் இருந்த அதிகாரிகள் ஏற்படுத்தி வைத்து உள்ளனர். 
ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் எந்திரம் மூலம் மக்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பல தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் ஏழை நோயாளிக்கு 100 சதவீதம் சென்றடையும் என்று உறுதி அளிக்கிறேன். 
ஆஸ்பத்திரியை மேம்படுத்த...
நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ள அளவுக்கு ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே வந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
முதல் அலையில் 5 முதல் 6 நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடிந்தது. ஆனால் தற்போது காய்ச்சல் ஏற்பட்டாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 2 நாட்களில் நுரையீரல் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது. இந்த தாக்கத்தை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
கொரோனா படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதி, டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை என்ற நிலை இல்லாத நிலை உருவாக்கப்படும். 
தரமான சிகிச்சை
தரமான சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நோயாளியும் இறக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. ஆனால் 100 சதவீதம் இறப்பை தவிர்க்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாது. எந்த டாக்டரும் நோயாளி இறக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் கண்டிப்பாக எடுக்கப்படும்.
அரசு மக்களின் தேவையை அதிக அளவில் நிறைவேற்றி வருகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசின் இன்சூரன்சு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கொரோனா நோய்க்கு இன்சூரன்சு திட்டத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படம். 
கருப்பு பூஞ்சை நோய்?
கருப்பு பூஞ்சை நோய் இதுவரை தூத்துக்குடியில் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவருக்கு சந்தேகத்தின் பேரில் சதை மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில்தான் கருப்பு பூஞ்சை நோயா என்பது தெரியவரும். தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், தொடர் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்