கொரோனா ஊரடங்கால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல லட்சம் வர்த்தகம் பாதிப்பு
கொரோனா ஊரடங்கால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.;
பொறையாறு,
தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை யொட்டி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான தடை காலம் அமலில் உள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோவில், தாழம்பேட்டை ஆகிய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது 118 விசை மற்றும் இழுவை படகுகளை பராமரிப்பு பணி செய்ய நாகப்பட்டினம், காரைக்கால், ஜெகதாபட்டினம் ஆகிய துறைமுகம் பகுதிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். தற்போது வலை, பைபர் படகு என்ஜின்களை பழுது நீக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கரை பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சென்று மத்தி, வாலை, கானாங்கெளுத்தி உள்ளிட்ட சிறிய வகை மீன்களை பிடித்துவந்து விற்பனை செய்து வந்தனர். தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை செய்யப்பட்டு இருப்பதால் கேரளா பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து மத்தி மீன்களை வாங்கி செல்வர். ஊரடங்கால் கேரளா வியாபாரிகள் வருவது இல்லை. இதனால் தரங்கம்பாடி, சந்திரபாடி பகுதி மீனவர்கள் மத்தி மீன்களை பிடிக்க கடலுக்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.
இதனால் தினந்தோறும் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து அமலில் இருக்கும் ஊரடங்கு மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் தரங்கம்பாடி தாலுகா பகுதி மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேதனையில் உள்ளனர்.