கொரோனாவை தடுக்கும் வகையில் மயிலாடுதுைறயில், சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்
கொரோனாவை தடுக்கும் வகையில் மயிலாடுதுைறயில், சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை,
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் 7 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு விதிமுறைகளை மீறி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வரை தேவையின்றி சுற்றித்திரிந்த 3 கார்கள் உட்பட 209 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
2-வது நாளான நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில் பட்டமங்கலத்தெரு, மகாதனத்தெரு, காந்திஜி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
அதேபோல போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் சாைலகளில் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனாலும் நேற்று மட்டும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 66 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.