தடுப்பூசி போடும் பணி
திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து தமிழகத்தில் போடப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் போடப்பட்டது. அதன்பின்னர் மூத்தோருக்கும், இதனைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதன் பின்னர் கொரோனா பாதிப்பின் அதிகரிக்க தொடங்கியதால் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தீவிரம்
இதனால் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது. இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் திருப்பூருக்கு வந்தது. அரசு வழிகாட்டுதலுக்காக தடுப்பூசி செலுத்தாமல் இருந்தது.
இந்நிலையில் அரசு உத்தரவுப்படி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி டாக்டர் வசந்தா பிரேமா தலைமையில் போடப்பட்டது. இதுபோல் கே.வி.ஆர்.நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பூர்ணிமா பிரியா தலைமையில் முன்கள பணியாளர்கள், போலீசார் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பலரும் தடுப்பூசி போட ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்த பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.