கோவில் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி
உடுமலையில், நகராட்சியின் அனுமதி பெறாமல் கோவில் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்ததை நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலையில், நகராட்சியின் அனுமதி பெறாமல் கோவில் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்ததை நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் கோவில்
உடுமலை டி.வி.பட்டிணத்தில் செந்தில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு பாத்தியபட்டதாக, கோவில் நிர்வாகத்தினரான உடுமலை சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செந்தில் விநாயகர் கோவிலுக்கு மேலே பெரிய அளவில் மேற்கூரை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. இதற்கு நகராட்சியில் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்றுகாலை போலீசாருடன் அங்குவந்தனர். தகவல் கிடைத்ததும் சமயபுரம் ஆயிர வைசியர் சங்கத்தினர் அங்கு வந்து சேர்ந்தனர்.
வாக்குவாதம்
அப்போது இந்த கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கும், ஆயிர வைசியர் சங்கத்தினருக்கும்வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினை குறித்து பேசிக்கொள்ளலாம் என்று கூறி நகராட்சி அதிகாரிகளையும், இந்த சங்கத்தினரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உடுமலை நகரில் தளி பிரதான சாலையில் கோவிலுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.