தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி போடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போடி:
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி மாவட்ட பொதுச்செயலாளர் என்.ரவிமுருகன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போடி நகர செயலர் பி.முருகேசன், துணை செயலாளர்கள் சத்தியராஜ், சுந்தர், நிர்வாகிகள் கோவிந்தராஜ், பரமன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதோடு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 3 வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
மின்சாரம் மற்றும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.