தேனி அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.;

Update: 2021-05-26 13:01 GMT
தேனி:
 ஆய்வுக்கூட்டம்
 
 தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலந்தாய்வு செய்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள், தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா பரிசோதனை, சிகிச்சை போன்ற விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர், கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

ஆக்சிஜன் உற்பத்தி

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பரிசோதனை செய்யும் எண்ணிக்கையில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது அந்த பரவல் 20 சதவீதமாக குறைந்து உள்ளது.

 தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இன்னும் ஒரு வார காலத்தில் நோய் பரவலை 10 சதவீதமாக குறைக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜனை இருப்பு வைக்க வசதி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்திலேயே காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் பிற அரசு மருத்துவமனைகளிலும் காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் உதவியாக இருக்கும்.

 மக்களுக்கு உடனடி சிகிச்சை

 மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான பரிசோதனை இடங்கள், படுக்கை வசதிகள் குறித்து இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொலைபேசி வாயிலாக விவரம் கேட்பவர்களுக்கும் தேவையான படுக்கை வசதிகளை தாமதமின்றி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

 கொரோனா பாதிப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மக்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து கொடுத்து சிகிச்சை அளித்தால் நீங்கள் தான் கடவுள். 

தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கொரோனா பாதிப்புக்கு முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், போடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவரை அமைச்சர் இ.பெரியசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். 

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு சவாலாகி உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இது ஒரு தேசிய பேரிடர். அரசு மட்டுமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

வெளி மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் பரவுவதற்கான காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் என்.ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
=====
(பாக்ஸ்) மின்தடையால் மக்கள் அவதி
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின் போது மின்தடையால் மக்கள் அவதி அடைந்துள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் பேசும்போது, "ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 14 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர். மின்இணைப்பு வழங்க கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு உறுதி செய்த நபர்கள் ஆண்டிப்பட்டி பகுதிகளில் இயல்பாக நடமாடுகிறார்கள். பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார். 

கூட்டத்தில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் பேசும்போது, "பெரியகுளம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 100 படுக்கை வசதிகள் உள்ள போதிலும், 50 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள். மற்றவர்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பெரியகுளம் பகுதியில் குடிநீரை முறையாக சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்