கொரோனா நோயாளி வீட்டில் கைவரிசை காட்டிய மாநகராட்சி ஊழியர் திருடிய நகையை அடகு வைத்து செல்போன் வாங்கியதால் சிக்கினார்

திருமுல்லைவாயலில் கொரோனா நோயாளி வீட்டில் நகையை திருடி அடகு வைத்து செல்போன் வாங்கிய மாநகராட்சி ஊழியர் சிக்கினார்.

Update: 2021-05-26 05:01 GMT
ஆவடி, 

திருமுல்லைவாயல், எம்.ஜி.ஆர்.நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் அஜித் (வயது 26). இவரது தாயார் கடந்த 18-ந் தேதி கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். இதனால் அவரது வீட்டை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய ஆவடி மாநகராட்சி ஏற்பாடு செய்தது.

இதன்படி ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் அம்பத்தூரை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த தூய்மைப்பணியாளரான ரகு (47) என்பவர் நியமிக்கப்பட்டார். இவருடன் 4 பேர் அஜித் வீட்டிற்கு சுத்தம் செய்துவிட்டு கிளம்பி சென்றனர்.

இந்நிலையில் அஜித்தின் தந்தை அலெக்சாண்டர் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, அவர் தனது மகன் அஜித்திடம் வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் 7 பவுன் நகை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அஜித் நகையை வைத்த இடத்தில் தேடிய போது அங்கு இல்லை.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர். அதில் அஜித் வீட்டுக்கு வந்த 4 பேரில் ரகு மட்டும் புதிதாக செல்போன் வாங்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் ஆடம்பரமாக இருப்பதை கண்டு சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ரகு வீட்டை சுத்தம் செய்யும் போது கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றதையும், புதூர் பகுதியில் நகையை அடகுவைத்த பணத்தில் செல்போன் வாங்கியதையும் ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் ரகுவை நேற்று கைது செய்து, நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்