தனியார் ஆஸ்பத்திரிகள், கிளீனிக்குகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தனியார் ஆஸ்பத்திரிகள், கிளீனிக்குகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது.

Update: 2021-05-26 04:27 GMT
சென்னை, 

கொரோனா நோய் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகள், கிளீனிக்குகளில் சிகிச்சைக்கு வருபவர்களில் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், அவர்களின் விவரங்களை நகர சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் சென்னையில் சில தனியார் ஆஸ்பத்திரிகள், கிளீனிக்குகள், வீடுகளுக்கு அருகில் தனியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இதுபோல் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் விவரங்களை தெரிவிப்பதில்லை.

எனவே பேரிடர் மேலாண்மை சட்டப்படி, தனியார் ஆஸ்பத்திரிகள், கிளீனிக்குகள் மற்றும் தனியாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற வருபவர்களின் தகவல்களைgccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரிக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறினால், பேரிடர் மேலாண்மை சட்டம் 51-வது பிரிவின் கீழ் குற்றம் ஆகும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்