ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,555 பேருக்கு தொற்று: 2 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலி- சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 1,555 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2021-05-25 21:17 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 1,555 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 1,500 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொற்று பரவுவதை தடுக்க பெரும் சவாலாக இருந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 366 ஆக உயர்ந்தது. இதில் 33 ஆயிரத்து 712 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 956 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள்.
சிகிச்சை
கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது 12 ஆயிரத்து 389 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 7 ஆயிரத்து 817 பேர் வீட்டு தனிமையில் உள்ளார்கள்.
மேலும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் 138 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
13 பேர் பலி
இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 53 வயது பெண் 13-ந் தேதியும், 51 வயது ஆண், 61 வயது முதியவர் ஆகியோர் 16-ந் தேதியும், 60 வயது முதியவர் 18-ந் தேதியும், 71 வயது மூதாட்டி, 49 வயது ஆண் ஆகியோர் 19-ந் தேதியும், 38 வயது பெண் 20-ந் தேதியும், 67 வயது ஆண், 52 வயது ஆண், 92 வயது மூதாட்டி ஆகியோர் 22-ந் தேதியும், 73 வயது மூதாட்டி, 42 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும், 66 வயது முதியவர் நேற்றும் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது.
படுக்கை வசதிகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், போதுமான படுக்கை வசதிகளை தயார் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட 131 படுக்கைகள் உள்ளன. இதை 250 படுக்கைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 550 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதால் கூடுதலாக 650 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் வருகிற 28-ந் தேதி ஆக்சிஜன் வசதி கொண்ட 300 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுதவிர 200 படுக்கைகள் கொண்ட நிரந்தர கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. எனவே மொத்தம் 1,550 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக மாற்றப்பட உள்ளது. கோபி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை அளிப்பது இல்லை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. அங்குள்ள 143 படுக்கைகளில் 30 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள படுக்கைகள் பொதுநோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மேலும் செய்திகள்