குழந்தை பிரசவித்த 2-வது நாளில் கொரோனாவுக்கு பெண் பலி
குழந்தை பிரசவித்த 2-வது நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,801 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,195 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே பெரம்பலூரை அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண், கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்று காரணமாக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 23-ந் தேதியன்று அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை அந்த பெண் பரிதாபமாக இறந்தார். அவரது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை பெற்ற 2-வது நாளில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.