திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் முத்தாலம்மன் கோவில் தெருவில் பெரில் என்பவரின் மூங்கில் தோட்டம் உள்ளது. இங்குள்ள காய்ந்த மூங்கில் மரங்களில் சில திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் பட்டதால் அதுவும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கப்பலூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. தற்போது கோடைகாலம் என்பதால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் வீட்டில் புழுக்கத்தில் தவித்தனர். தகவலறிந்த திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதைதொடர்ந்து மின்வயர் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.