வடக்கு விஜயநாராயணத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
வடக்கு விஜயநாராயணத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி போடும் பணி
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீஸ்வரர் சிவன் கோவிலில் வைத்து 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது நகர பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கிராம பகுதிகளில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது. பொதுமக்கள் எந்த வித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்.
வீடு, வீடாக...
தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் கூட்டமாக வராமல் தனித்தனியாக முககவசம் அணிந்து வந்து போட வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர், சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வெங்கட்ராயபுரம், அங்கன்வாடி பள்ளியிலும் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
முகாமில் நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுலட்சுமி, சாந்தி, டாக்டர்கள் கற்பகஜோதி, வரதராஜன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலீல்ரகுமான், பரமசிவன், சுகாதார செவிலியர் ரேவதி, வள்ளியூர் ரெட்கிராஸ் செயலாளர் சபேசன், சமூக ஆர்வலர் லைசால் எட்வர்டு, ஊராட்சி செயலர்கள் சொ.முருகன், சு.முருகன், நம்பி, சுடலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.