ரூ.50 லட்சம் நகையுடன் கல்லூரி மாணவி மாயம்

மண்டைக்காடு அருகே ரூ.50 லட்சம் நகையுடன் மாயமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update:2021-05-26 00:42 IST
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே ரூ.50 லட்சம் நகையுடன் மாயமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
மண்டைக்காடு அருகே இளந்தோப்புவிளையை சேர்ந்தவர் துரைமணி, வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவருடைய மகள் ஸ்ரீவித்யா (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பி.எட். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஆன் லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் வீட்டில் இருந்தபடி பாடங்களை படித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மாலையில் ஸ்ரீவித்யா தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவரை காணவில்லை.
1 கிலோ நகை மாயம்
தொடர்ந்து பெற்றோர் வீட்டில் பார்த்த போது அவரது திருமணத்திற்காக வைத்திருந்த 1 கிலோ 160 கிராம் (145 பவுன்) நகைகளையும் காணவில்லை. அவற்றை ஸ்ரீவித்யா எடுத்து சென்றதாக தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால், அவர் குறித்து  எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
போலீசில் புகார்
இதுகுறித்து மாணவியின் தந்தை துரைமணி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நகையுடன் சென்ற மாணவி எங்கே? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்