வீரப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் உள்பட 4 குண்டுகள் கண்டெடுப்பு
வையம்பட்டி அருகே ராணுவத்தினரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் உள்பட 4 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
வையம்பட்டி,
வையம்பட்டி அருகே ராணுவத்தினரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் உள்பட 4 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
துப்பாக்கி சுடும் பயிற்சி
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலை அடிவாரத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். பயிற்சி நடைபெறும் போது அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். பயிற்சி முடிந்த பின்னர் ராணுவ வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விடுவார்கள். அப்போது வெடிக்காமல் இருக்கும் குண்டுகளை எடுத்துச்செயலிக்க செய்து விட்டு செல்வார்கள்.
வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டு
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்த வந்த ஒரு படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்ததும் 27-ந்தேதி 2 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் வெடிக்காமல் போனது. உடனே ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தான் வீரமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்டெடுப்பு
அப்போது மணப்பாறை போலீஸ் எல்லைக்குட்பட்ட மத்தகோடங்கிப்பட்டி அருகே வெடிக்காத நிலையில் ஒரு குண்டும், கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருக்கல் பகுதி என்ற இடத்தில் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு உள்பட 3 குண்டுகள் வெடிக்காத நிலையில் இருப்பதை பார்த்தனா். உடனே இதுபற்றி வருவாய்த்துறை மற்றும் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினரும், வையம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றி கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட ராணுவ படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வீரமலை அடிவாரப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி பகுதிக்கு வந்து வெடிக்காமல் இருந்த 4 குண்டுகளையும் எடுத்துச் சென்று செயலிக்கச் செய்து அதே பகுதியில் ஆழமாக குழிதோண்டி புதைத்தனர்.