கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

கிணத்துக்கடவில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-05-25 18:20 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்  அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

கொரோனா பரவல் 

கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோன்று ஆஸ்பத்திரி களும், கொரோனா சிகிச்சை மையங்களும் நிரம்பி வருவதால், புதிதாக பல இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 300 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 

மேலும் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அதிகாரிகள் ஆய்வு 

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப் பட்டது. 

இதையடுத்து அந்த கல்லூரியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

மேலும் அங்கு கழிப்பிட வசதி உள்பட அனைத்து வசதிகள் உள்ளதா என்றும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது தாசில்தார் சசிரேகா, மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர் கேசவமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா வால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியே சுற்றுவதாக புகார் வந்து கொண்டு இருக்கிறது. 

எனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் அந்த மையம் செயல் பாட்டுக்கு வரும் என்றனர்.

மேலும் செய்திகள்