வாட்ஸ்அப்பில் பதிவு செய்வோருக்கு வீடுகளுக்கே காய்கறி வினியோகம்

ராமநாதபுரம் நகர் பகுதியில் வாட்ஸ்அப்பில் பதிவு செய்வோருக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி வினியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-25 17:56 GMT
ராமநாதபுரம்,மே.
ராமநாதபுரம் நகர் பகுதியில் வாட்ஸ்-அப்பில் பதிவு செய்வோருக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி வினியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
காய்கறி வினியோகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தோட்டக்கலைத் துறையின் சார்பாக அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வாகனங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்- அப் எண்
இப்பணிகளை மேம்படுத்தும் வகையில் ராமநாதபுரம் நகர் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் பதிவு செய்பவர்களின் வீடுகளுக்கே காய்கறிகளை நேரடியாக வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 7299462970 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குள் பதிவு செய்பவர்களுக்கு மறுநாள் காலை 10 மணிக்குள் தோட்டக்கலை துறையின் மூலம் ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்புள்ள காய்கறி தொகுப்புகள் வழங்கப்படும். 
என்னென்ன காய்கறிகள்?
ரூ.50 தொகுப்பில் உருளைக்கிழங்கு ¼ கிலோ, பெரிய வெங்காயம் ¼ கிலோ, கத்தரிக்காய் ¼ கிலோ, வெண்டைக்காய் ¼ கிலோ, பீட்ரூட் ¼ கிலோ, தக்காளி ½ கிலோ, மிளகாய், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை இருக்கும். 
ரூ.100 மதிப்புள்ள தொகுப்பில் உருளைக்கிழங்கு ½ கிலோ, பெரிய வெங்காயம் ½ கிலோ, கத்தரிக்காய் ½ கிலோ, முட்டைகோஸ் ¾ கிலோ, பீட்ரூட் ½ கிலோ, தக்காளி ஒரு கிலோ மற்றும் மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை அடங்கியிருக்கும்.
எனவே ராமநாதபுரம் நகர் பகுதியில் காய்கறி தொகுப்புகள் தேவைப்படுவோர் மேற்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலம் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குள் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்