ஊரடங்கை மீறி திருமணம்: மண்டபத்துக்கு சீல் வைப்பு நகராட்சி ஆணையர் நடவடிக்கை

கூத்தாநல்லூரில் ஊரடங்கை மீறிய திருமணம் நடந்ததால் மண்டபத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-25 17:55 GMT
கூத்தாநல்லூர்,

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஊரடங்கை அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கூத்தாநல்லூர் பகுதியில் நகராட்சி ஆணையர் லதா அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த நடைமுறைகளை பின் பற்றாத கடைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சீல் வைப்பு

நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லெட்சுமாங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

அப்போது, திருமணம் நடைபெறுவதையும், கூட்டம் கூடி இருந்ததையும் கண்ட அதிகாரிகள் திருமண மண்டபத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். பின்னர், திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், முழு ஊரடங்கை மீறி திருமணம் நடத்த அனுமதி வழங்கியதால் திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்