தளியில் பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக்கொலை: கைதான 2 ரவுடிகளிடம் விடிய, விடிய போலீஸ் விசாரணை

தளியில் பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 2 ரவுடிகளிடமும், விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2021-05-25 17:50 GMT
தேன்கனிக்கோட்டை:
தளியில் பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 2 ரவுடிகளிடமும், விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பெயிண்டிங் காண்டிராக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள பெல்லூரை சேர்ந்தவர் லோகேஷ் என்கிற புல்லட் லோகேஷ் (வயது 36), பெயிண்டிங் காண்டிராக்டர். கடந்த 23-ந் தேதி இரவு இவர் வீட்டில் இருந்த போது, தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன்ரெட்டி, ஓசூரை சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன் ஆகிய 2 ரவுடிகள் உள்பட 4 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் லோகேசை வீட்டிற்கு வெளியே அழைத்து சென்றனர். அந்த நேரம் லோகேசை எதுபூஷன்ரெட்டி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் கொலையாளிகள் தப்பி ஓடினார்கள். 
இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடிகள் எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.
விடிய, விடிய விசாரணை
அவர்களிடம் நடத்திய விசாரணையில் எதுபூஷன்ரெட்டி வீடு கட்ட ரூ.5 லட்சம் லோகேசிடம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் இந்த கொலை நடந்ததாக தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:-
ரவுடி கொலை காரணமா?
தளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியை சேர்ந்த ரவுடி நரேஷ்பாபு (28) கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி சிக்கன் வாங்க வந்த போது நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
அதில் கடந்த 20.06.2018 அன்று தளி ஜெயந்த் காலனியை சேர்ந்த உமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதும், அந்த கொலையில் 3-வது குற்றவாளியாக நரேஷ்பாபு சேர்க்கப்பட்டதும் தெரிய வந்தது.
அதனால் உமேசின் உறவினர் லட்சுமிபதி (26), மற்றும் அவருடன் சேர்ந்து ஆசிக் என்பவரும் அந்த கொலையை செய்தது தெரிய வந்தது. அவர்களை தளி போலீசார் கைது செய்தனர். இந்த கொலை விவகாரமும் தற்போது நடந்த லோகேஷ் கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. எதுபூஷன்ரெட்டி தனது உயிருக்கு ஆபத்து என்பதால் முந்திக்கொண்டு லோகேசை தீர்த்து கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் 4 பேர் என போலீசார் கூறிய நிலையில், தாங்கள் 2 பேர் மட்டுமே வந்ததாகவும், எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரும் கூறி வருகிறார்கள். அதனால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்