கடலூரில் எண்ணெய் ஆலைக்கு தீ வைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கடலூரில் எண்ணெய் ஆலைக்கு தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-25 17:40 GMT
கடலூர், 


கடலூர் செம்மண்டலம் ஜோதி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் சதீஷ் (வயது 36).இவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை (செக்கு ஆலை) கம்மியம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 23-ந்தேதி இரவு ஆலையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தனது ஆலையை பார்க்க சென்றார். அப்போது ஆலையில் இருந்த எந்திரங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது.

 அருகில் அவர் வைத்திருந்த 100 லிட்டர் நல்எண்ணெயும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தீ மேலும் பரவாமல் அணைத்தார். மின் கசிவு காரணமாக ஆலை தீப்பிடித்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.

தீ வைப்பு

இருப்பினும் சந்தேகத்தின் பேரில் ஆலையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது ஆலைக்குள் முழு கவச உடை அணிந்தபடி புகுந்த மர்ம நபர் அங்கிருந்த எந்திரங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடுகிறார். இதை பார்த்த அவர் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.


அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடைக்குள் புகுந்து தீ வைத்து கொளுத்திய நபர் யார்? முன்விரோத தகராறில் ஆலைக்கு தீ வைத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா ?என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தீ வைத்த நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்