கூலிப்படையை ஏவி மனைவி கொலை அமெரிக்க என்ஜினீயரின் மைத்துனர் மீது வழக்குப்பதிவு அரசு பஸ் டிரைவர்கள் மூலமாக கொடூரத்தை அரங்கேற்றியது அம்பலம்

கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்த வழக்கில் அமெரிக்க என்ஜினீயரின் மைத்துனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த கொடூர கொலையை அரசு பஸ் டிரைவர்கள் மூலமாக அரங்கேற்றி இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2021-05-25 17:35 GMT
திருவாரூர்:-

கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்த வழக்கில் அமெரிக்க என்ஜினீயரின் மைத்துனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த கொடூர கொலையை அரசு பஸ் டிரைவர்கள் மூலமாக அரங்கேற்றி இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க என்ஜினீயர்

திருவாரூர் கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகள் ஜெயபாரதி(வயது 28). பி.எஸ்சி. பட்டதாரி. இவருக்கும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கரிகுளம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ்(33) என்பவருக்கும் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு வைஷாலி என்ற 3 வயது மகள் உள்ளார். 
விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருடன் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்த ஜெயபாரதி கருத்து வேறுபாடு காரணமாக திருவாரூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். திருவாரூர் அருகே ஆந்தைகுடி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வந்தார். 

சரக்கு வேன் மோதியது

கடந்த 21-ந் தேதி ஜெயபாரதி பணி முடிந்ததும் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருவாரூர் அருகே உள்ள தப்பாளம்புலியூர் கடுமையாற்று பாலம் பகுதியில் சென்றபோது எதிரில் வந்த சரக்கு வேன், ஜெயபாரதி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
முதலில் அவர் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயபாரதியின் அண்ணன் சிவக்குமார் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ஜெயபாரதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். அதன்பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கொலை செய்ய திட்டம்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூலிப்படை மூலமாக சரக்கு வேனை ஸ்கூட்டர் மீது ஏற்ற செய்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் தீவிர விவாரணையில் ஜெயபாரதியின் கணவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஜெயபாரதி தனது கணவர் விஷ்ணுபிரகாசுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதும், இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணுபிரகாஷ் தனது மைத்துனர் குடவாசல் செல்லூரை சேர்ந்த ஆர்.செந்தில்குமார்(46) என்பவர் மூலம் ஜெயபாரதியை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. 
இந்த வழக்கு தொடர்பாக சரக்கு வேனை ஓட்டிய தஞ்ைச மாவட்டம்  கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரசன்னா(24), சரக்கு வேனின் உரிமையாளர் திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40), குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜா(47), குடவாசல் சித்தாநல்லூரை சேர்ந்த ஜெகன் (37) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். 

மைத்துனர் மீது வழக்கு

இந்த விவகாரத்தில் விஷ்ணுபிரகாசின் மைத்துனர் ஆர்.செந்தில்குமார் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவரும், ஏற்கனவே கைதான ராஜா என்பவரும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள் ஆவர். கைதான ஜெகன் என்பவரும் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி விபத்து காரணமாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். 
இவர்கள் (அரசு பஸ் டிரைவர்கள்) மூலமாகவே இந்த கொடூர கொலையை அரங்கேற்றி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை
வழக்கில் தொடர்புடைய விஷ்ணுபிரகாஷ் மைத்துனர் செந்தில்குமார் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கும்பகோணம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடையில் விஷ்ணுபிரகாசை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்து கைது செய்வதற்கும் போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்