வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்தது
திண்டிவனம் அருகே வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்தது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வைரபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு நீர் செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது. மழைக்காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த வாய்க்காலின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தை கடந்துதான் நெய்குப்பி, கொடியம்புதூர், கொடியம், அம்மணம்பாக்கம், மேல்ஆதனூர், வைரபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அனந்தமங்கலம், மேட்டுப்பாளையம், தின்னலூர், ஒரத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.
உடைந்து விழுந்தது
கடந்த சில மாதங்களாக இந்த பாலம் பலவீனமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கொடியம் கூட்டு சாலை, வைரபுரம், தாதாபுரம் ஆகிய பகுதிகள் வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் செல்வம், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி, பொறியாளர் குந்தாலா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கிராம மக்கள், மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த பாலத்தை கட்டித்தர வேண்டும் என்றும், அதுவரை இப்பகுதி மக்கள் சென்று வர மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.