கல்வராயன்மலையில் 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் 500 கிலோ வெல்லம் அழிப்பு
கல்வராயன்மலை அடிவாரத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 500 கிலோ வெல்லம் ஆகியவற்றை அழித்த போலீசார் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கச்சிராயப்பாளையம்
ரகசிய தகவல்
கல்வராயன் மலை அடிவாரம் மல்லிகைப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், நரசிம்ம ஜோதி மற்றும் தனிப்படை போலீசார் மல்லிகைப்பாடிவனப்பகுதியில் அதிடி சோதனையில் ஈடுபட்டனர்.
8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்
அப்போது ஓரிடத்தில் புகை மூட்டம் வெளியேறியதை கண்ட போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கே மர்ம கும்பல் ஒன்று சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 40 பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 500 கிலோ வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்களையும் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட அடுப்புகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.