கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய டாக்டர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை - கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்
கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.;
தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய உள்ள மருத்துவர்கள், செவ்லியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பணி நியமன ஆணைகளை எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் மருதுதுரை, தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜய கவுரி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் (பொறுப்பு), தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சைமருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தலா 100 டாக்டர்கள், செவிலியர்கள், 57 மருத்துவ உதவியாளர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று முதல் பணியைத் தொடங்குவர். மருத்துவர்களின் தேவையைக் கருதி முதல்-அமைச்சரின் உத்தரவுபடி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டும். தஞ்சை மாநகராட்சி சார்பில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி அங்காடியினை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.