மயிலாடுதுறை, திருவாரூரில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

மயிலாடுதுறை, திருவாரூரில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2021-05-25 12:25 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் உள்ள கொரோனா சித்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை என்பதால் 50 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்கள் வருகிற 27-ந்தேதிக்குள் நிரப்பப்படும். மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளையும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை பார்வையிட்டார். அதன்பின் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் பணிகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோடியக்கரை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.

முன்னதாக நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் செல்வராஜ், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகைமாலி, பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம் பிரகாஷ் மீனா(நாகை), ஸ்ரீநாதா(மயிலாடுதுறை) உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்