கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி எம்.எல்.ஏ. விடம் விவசாயிகள் மனு

திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரனிடம் நேற்று விவசாயிகள் சங்க நிர்வாகி களாம்பாக்கம் பன்னீர்செல்வம் தலைமையில் திரளான விவசாயிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

Update: 2021-05-25 09:59 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நரசிங்கபுரம் கலங்கள் கால்வாய் பிளேஸ் தோட்டம் வழியாக வந்து கூவம் ஆற்றில் கலக்கிறது. அவ்வாறாக உபரி நீர் வெளியேறும் கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த உபரி நீர் கூவம் ஆற்றில் கலப்பதால் திருவாலங்காடு கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் மழைக்காலங்களில் இருளஞ்சேரி கிராமம் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இந்த கால்வாயை சரிசெய்தால் இருளஞ்சேரி கிராமம் தண்ணீரில் மூழ்காமல் தப்பும்.

மேலும் கடம்பத்தூர், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விளைநிலங்களில் ஆழ்துளை கிணற்றை நம்பி இருப்பதால், கூவம் ஆற்றின் குறுக்கே நரசிங்கபுரம் பேரம்பாக்கத்திற்கு இடையே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்