மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி

மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்கி இருந்த இங்கிலாந்து நாட்டு பயணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-05-25 00:59 GMT
மாமல்லபுரம்,

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரை சேர்ந்தவர் லியோரிகுரூஷ் (வயது 90). இவர் இங்கிலாந்து, இந்தியா என இரு நாட்டில் தங்குவதற்கான இரட்டை குடியுரிமை பெற்றவர். லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா வந்து தங்கியிருந்தார்.

பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகருக்கு சுற்றுலா வந்த அவர், அங்குள்ள கோவளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் லியோரிகுரூசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நுரையீரல் தொற்று

இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடல் கொரோனா நோயாளிகளை எரியூட்டும் மறைமலை நகரில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்