குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-05-25 00:52 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி, மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் மாளவிகா (வயது 20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள அறைக்குள் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்துஉள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மாளவிகா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாளவிகாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாளவிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

இறந்துபோன மாளவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், மாளவிகா உடன் பயிலும் மாணவர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாளவிகா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மேலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்