சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி

Update: 2021-05-24 22:34 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி போடும் பணி
18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. 
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக 42 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 6 ஆயிரத்து 400 கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்ததை தொடர்ந்து நேற்று முதல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற தகவல் கிடைக்காததால் முதல்நாளான நேற்று இளைஞர்கள் குறைவாகவே வந்தனர்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
சேலம் கன்னங்குறிச்சி  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.  மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-
கன்னங்குறிச்சி  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் 18 முதல் 44 வயதுடைய ஏராளமானவர்கள் இணையதளம் வாயிலாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி கொண்டார்கள். 
தினசரி நாளிதழ் வினியோகிப்பவர்கள்
சேலம் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 721 பேருக்கும், 2-வது தவணையாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 368 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது முன் களப்பணியாளர்கள், தினசரி நாளிதழ் வினியோகிப்பவர்கள், பால் வினியோகஸ்தர்கள் மற்றும் பால் விற்பனையாளர்கள், மருந்தக பணியாளர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், இ-சேவை மைய ஊழியர்கள், அத்தியாவசிய பணியாற்றும் ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு இத்தடுப்பூசி போடப்படுகின்றது. 
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தற்காலிக பணியாளர்கள், ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் போன்றவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள்
மேலும் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்காமல் நேரடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, 18 முதல் 44 வயது வரையிலான அனைத்து  பொதுமக்களுக்கும் இத்தடுப்பூசி தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரையிலான சுமார் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. சேலம் மாவட்டத்திற்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி 42 ஆயிரத்து 800 டோஸ்களும், கோவேக்சின் தடுப்பூசி 6 ஆயிரத்து 400 டோஸ்களும் வரப்பெற்றுள்ளன. 
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் டாக்டர்.சுப்பிரமணி, டாக்டர்.செல்வக்குமார், உதவி இயக்குனர் டாக்டர்.பி.சிவராமன், மாவட்ட தாய்சேய் நலஅலுவலர் டாக்டர்.வே.விஜயலட்சுமி, கன்னங்குறிச்சி  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.என்.சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்