தளி அருகே பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக்கொலை பிரபல ரவுடிகள் 2 பேர் கைது

தளி அருகே பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக்கொலை பிரபல ரவுடிகள் 2 பேர் கைது

Update: 2021-05-24 21:25 GMT
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே பெயிண்டிங் காண்டிராக்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெயிண்டிங் காண்டிராக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள பெல்லூரை சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் லோகேஷ் என்கிற புல்லட் லோகேஷ் (வயது 36). பெயிண்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்தவர் எதுபூஷன் ரெட்டி (32). இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. லோகேசும், எதுபூஷன்ரெட்டியும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் தனது வீட்டில் இருந்தார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு ரவுடி எதுபூஷன் ரெட்டி, ஓசூர் பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (34) மற்றும் மேலும் 2 பேர் ஒரு காரில் வந்தனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
அவர்கள் லோகேசை வீட்டில் இருந்து வெளியே அழைத்தனர். அப்போது வெளியே வந்த அவரிடம் பேசிய எதுபூஷன்ரெட்டி, நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன். எனக்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. எனவே பணம் தருமாறு கேட்டார்.
ஆனால் லோகேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதுபூஷன்ரெட்டி தன்னுடன் வந்த ரவுடி கஜா மற்றும் மேலும் 2 பேர் உதவியுடன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் (பிஸ்டல்) லோகேசின் இடதுபுற நெற்றியில் சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் சரிந்து விழுந்தார்.
பரிதாப சாவு
அவரை சுட்டதும் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது. இந்த நிலையில் லோகேசின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி ஜெயந்தி (30) மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் லோகேசை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கொலையாளிகள் தப்பித்து செல்ல முடியாதபடி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.
2 ரவுடிகள் கைது
இந்த நிலையில் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே காரில் வந்த எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான ரவுடி கஜா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓசூரில் கொலை முயற்சியில் தப்பியவர். அந்த நேரம் அவருடன் இருந்த அவரது நண்பர் மகேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி என்பவரை ஓசூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நேரு நகரில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைதானவர்
அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓசூர் தி.மு.க. பிரமுகர் மன்சூரை பண விவகாரத்தில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெட்டிக்கொலை செய்தனர். 
2 கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கஜா, ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். ஓசூர் டவுன் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
====

மேலும் செய்திகள்