3 போலி டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
எழுமலையில் 3 போலி டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி, மே
எழுமலையில் 3 போலி டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனை
மதுரை அருகே எழுமலை பகுதியில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிலர் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பேரையூர் வருவாய் துறையினர் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு தலைமையில் சோதனை செய்தனர்.
அப்போது ராமர் (வயது 60) என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்து பொருட்கள் இருந்தன. அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 2 பேர்
அதேபோல் இதே ஊரைச் சேர்ந்த வாசிமலை (40), தங்கப்பாண்டி (35) ஆகிய 2 பேரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு மருந்து பொருட்களை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் விசாரணையில் அவர்கள் வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.