குமரியில் சாலைகள் வெறிச்சோடின
குமரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததன் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததன் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எனினும் பாதிப்பு குறையாததால் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனாலும் பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை. எனவே, நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட ஊரடங்கின்போது மளிகை மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 2-ம் கட்ட ஊரடங்கில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
காய்கறி கடைகள் மூடல்
நாகர்கோவிலை பொருத்த வரை வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, கேப் ரோடு, ஆராட்டு ரோடு போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன. வடசேரி, மணிமேடை பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அதே சமயம் நாகர்கோவில் மாநகரில் சில ஓட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறக்கப்பட்டது.
மருந்துகடைகள் (நாட்டுமருந்து மற்றும் கால்நடை மருந்தகங்கள் உட்பட) பால், தண்ணீர் மற்றும் தினசரி பத்திரிகை வினியோகம் எந்த நிபந்தனையும் இன்றி அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகம் ஆகியவை எவ்வித தடையும் இன்றி அனுமதிக்கப்பட்டது. விவசாய பொருட்கள் மற்றும் விவசாய இடு பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்ட எல்லை பகுதிகளான களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் முக்கியமான சந்திப்புகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
மார்த்தாண்டம்
மார்த்தாண்டம், குழித்துறை, மேல்புறம், சாமியார்மடம், நட்டாலம், வெட்டுமணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஒரு சில ஓட்டல்கள் பார்சல் விற்பனைக்காக அரசின் வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்திருந்தன. வங்கிகள் குைறவான எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கின. மார்த்தாண்டம் பகுதி முழுவதுமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
அத்தியாவசிய பணிகளுக்கு கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்தி எங்கு செல்கிறார்கள்? எதற்காக செல்கிறார்கள் என்பதை விசாரித்து அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்து அனுப்பினர்.
இதுபோல், குளச்சல், கொல்லங்கோடு, தக்கலை என அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மேலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.