ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் தளர்வில்லா முழு ஊரடங்கு; வெறிச்சோடிய சாலைகள்; தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களுக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-24 19:51 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தளர்வில்லா ஊரடங்கு
மனித குலத்தை அச்சத்தில் அலற வைத்துள்ள கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே உள்ளது. தமிழகத்திலும் நோய் தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 35 ஆயிரத்தை தாண்டுகிறது. இதனால் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முன்கள பணியாளர்களின் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் ஒரு சில வாகனங்கள் மட்டும் இயங்கின. 
போலீசார் ஏராளமான இடங்களில் தற்காலிக தடுப்பு கம்பிகளை வைத்து, விதியை மீறி தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்து அபராதமும் விதித்தார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் காலை 6 மணியில் இருந்தே அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை தடுத்து திருப்பி அனுப்பினார்கள். கார் உள்ளிட்ட வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு சென்றவர்களை மட்டும் அனுப்பினார்கள். 
இதேபோல் சத்தியமங்கலம் மார்க்கெட் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையம் அமைதியாக காணப்பட்டது. சத்தியமங்கலம் கடைவீதி, வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம், கோட்டு வீராம்பாளையம் என அனைத்து இடங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
பண்ணாரி சோதனைச்சாவடி
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி தமிழ்நாடு-கர்நாடகா எல்லை என்பதால் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, போக்குவரத்து துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.
ஊரடங்கு அறிவித்த பிறகு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு எந்த வாகனங்களும் வருவதில்லை. முக்கிய உணவுப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இந்தநிலையில் தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பண்ணாரியில் உள்ள சோதனைச்சாவடிகள் வெறிச்சோடின. புகழ்பெற்ற பண்ணாரி கோவில் பகுதியும் அமைதியாக காணப்பட்டது.
கோபி
கோபியில் தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி மருந்து கடைகள், பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கோபி மொடச்சூர் சிக்னலில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 
அப்போது தேவையின்றி வாகனங்களில் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோபி சத்தி ரோடு, மொடச்சூர் ரோடு, காசிபாளையம் ரோடு, நம்பியூர் கடத்தூர் ரோடு, நம்பியூர் ரோடு ஆகிய பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கொடுமுடி
கொடுமுடியில் தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு கொடுமுடி புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், முக்கிய கடைவீதி, கோவில் பகுதிகள், சாலைப்புதூர், ஒத்தக்கடை, கரூர்- ஈரோடு பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொடுமுடி போலீஸ் இன்ஸ்ெபக்டர் முருகன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மருந்து கடைகள், பார்சல் வழங்கும் உணவகங்கள் மட்டும் திறந்திருந்தன. 
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் ரோடுகளில் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மருந்து கடைகள், பால் பூத்துகள், ஏ.டி.எம். மையங்கள் மட்டும் திறந்திருந்தன. 
 இதேபோல் பர்கூர் மலைப்பகுதி தட்ட கடை சோதனைச்சாவடி, வரட்டுப்பள்ளம் வன சோதனைச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் அனைத்து ரோடுகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் முகாம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. 
ஊஞ்சலூர்
 ஊஞ்சலூர் மற்றும் அருகே உள்ள தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் பூத்துகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து ெசன்று தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களை எச்சரித்தார்கள். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள். சிலருக்கு அபராதம் விதித்தார்கள்.

மேலும் செய்திகள்