காரில் கடத்தி தொழிலாளி கொலை

கபிஸ்தலம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-24 19:41 GMT
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
கூலித்தொழிலாளி 
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி புது தெருவை ேசர்ந்தவர் பாலன்(வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கும், சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பாலன் அதே ஊரில் வசிக்கும் சந்திரகாசன்( 70) என்பவரிடம் பணம் பெற்றுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 
வழிமறித்து தாக்கி காரில் கடத்தல்
இதையடுத்து பாலன் ஈச்சங்குடியில் வசிக்காமல் தனது மாமியார் வீடான சுந்தரபெருமாள் கோவிலில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாலன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம்-திருவையாறு சாலையில் உமையாள்புரம் அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது ஈச்சங்குடியை சேர்ந்த சந்திரகாசன் மகன் ராஜதுரை(32),   அவரது நண்பர்கள் சென்னையை சேர்ந்த வினோத், ராஜூ ஆகியோர் பாலனை வழிமறித்து கட்டையால் தாக்கினர். பின்னர் அவரை காரில் கடத்தி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து பாலனின் மகன் பாபு கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
இந்த புகார் தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் பாலனை கடத்தி சென்றவர்களை வலைவீசி தேடி வந்தனர். 
கொன்று உடல் வீச்சு 
இந்த நிலையில் நேற்று மதியம் திருவையாறு அருகே திங்களூர் ஓடைக்கரையில் பாலன் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. 
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செ்யது விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் முன்விரோதம் ஏற்பட்டதில் ராஜதுரை, வினோத், ராஜூ ஆகியோர் பாலனை காரில் கடத்தி சென்று அவரை தாக்கி கொலை செய்துவிட்டு உடலை திங்களூர் ஓடைக்கரையில் வீசி சென்றது தெரிய வந்தது. 
வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக தமைறைவாக உள்ள ராஜதுரை உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
முன்விரோதம் காரணமாக தொழிலாளியை காரில் கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்