18 முதல் 44 வயது முன்னுரிமை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
மாவட்டங்களில் 18 முதல் 44 வயது முன்னுரிமை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.;
அரியலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார். பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை பெரம்பலூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடங்கி வைத்தார். தடுப்பூசி போட ஆர்வத்துடன் நிறைய பேர் வந்திருந்ததை காணமுடிந்தது. தடுப்பூசி போடும் வரும் நபர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அரியலூர் வட்டத்தில் அனைத்து வட்டார தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அஸ்வின் ஓட்டல் கூட்டரங்கிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் இலப்பைக்குகாடு பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு கொளக்காநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில், 2 லட்சத்து 82 ஆயிரத்து 407 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 712 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 541 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.