திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திண்டுக்கல்லில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.

Update: 2021-05-24 19:30 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலையில் நடந்தது. இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு, தனியார் மருத்துவமனையில் பிரச்சினைகள் ஏதும் உள்ளதா? என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் சிலர் அமைச்சர்களிடம் சில கோரிக்கைகளை வைத்தனர்.
அதாவது, அரசு மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முக கவசம், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வெளியூர்களுக்கு சென்று ஆக்சிஜன் வாங்கி வரும் நிலை உள்ளது. திண்டுக்கல்லிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி
அதையடுத்து உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் முறையாக கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து முன்கள பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், வேலுச்சாமி எம்.பி., வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 64 ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 லட்சத்து 77 ஆயிரத்து 107 பேருக்கு முதல் மற்றும் 2-ம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகளும் தேவையான அளவு உள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் அங்கு சிகிச்சை பெறுபவர்கள் கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். காப்பீடு செய்யாதவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்