வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை: விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் சமாதான கூட்டத்தில் உடன்பாடு

களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2021-05-24 19:28 GMT
நாங்குநேரி:
களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சமாதான கூட்டம்

களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் தற்போது 45 கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. தன்கால் பாசனத்திற்கு உட்பட்ட குளங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வயல்களில் இரண்டாம் போக நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் சார்பில் தேவநல்லூர் பாசன சங்க தலைவர் மாடசாமி தலைமையில் களக்காடு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இசக்கிபாண்டி தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. இதில் துணை தாசில்தார் கணேஷ், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பாசனப் பிரிவு உதவி பொறியாளர்கள் களக்காடு இந்திரா, நாங்குநேரி பாஸ்கரன் மற்றும் நீர்ப்பாசன சங்கத் தலைவர் தேவநல்லூர் மாடசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

போராட்டம் வாபஸ்

அப்போது விவசாயிகள், ஓராண்டுக்கு மேலாகியும் சேதப்படுத்தப்பட்ட பத்மநேரி தடுப்பணை இன்னும் சீரமைக்கப்படவில்லை. நெற்பயிர்களைக் காப்பாற்ற இரண்டு வாரங்களுக்கு முன்பே பச்சையாறு அணையை பாசனத்திற்காக திறக்க கோரிக்கை விடுத்தும் இன்னும் செயல்படுத்தவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 36 நாட்களுக்கு 100 கன அடிக்கு மிகாமல் தன்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசிடமிருந்து முறையான உத்தரவு வர பெற்றதும் தண்ணீர் திறக்கப்படும். மேலும் உயரதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும் பத்மநேரி தடுப்பணை சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து இன்று நடப்பதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

மேலும் செய்திகள்