திண்டுக்கல் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவரின் வாகனத்தை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-05-24 19:23 GMT
திண்டுக்கல், மே.25-
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவரின் வாகனத்தை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
‘வாட்ஸ்-அப் ஆடியோ’
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள ஒருவர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். அந்த வாகனத்தை விடுவிக்க மருந்து விற்பனை கடை உரிமையாளர் மூலம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பான ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
மேலும் இந்த ‘வாட்ஸ்-அப்’ ஆடியோ விவகாரம் போலீஸ் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
விசாரணையில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். அப்போது அவர், சப்-இன்ஸ்பெக்டரிடம் தனது வாகனத்தை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள ஒரு மருந்து விற்பனை கடையை காண்பித்த சப்-இன்ஸ்பெக்டர், அங்கு சென்று ரூ.2 ஆயிரம் கொடுத்துவிட்டு வந்தால் இருசக்கர வாகனத்தை விடுவிப்பதாக பாலமுருகனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மருந்து விற்பனை கடைக்கு சென்ற அவர், சப்-இன்ஸ்பெக்டர் கூறியபடியே ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். மேலும் தனது செல்போனில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டார். பின்னர் மருந்து கடை உரிமையாளரிடம் அந்த செல்போனை கொடுத்து பணம் வாங்கிக்கொண்டதாக சப்-இன்ஸ்பெக்டரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அவரும் அதுபோலவே கூறிவிட்டு செல்போனை பாலமுருகனிடம் திரும்ப கொடுத்தார்.
பணிடை நீக்கம்
ஆனால் சப்-இன்ஸ்பெக்டருடன் பேசியதை தனது செல்போனில் பாலமுருகன் ஆடியோவாக பதிவு செய்தது அந்த மருந்து கடைக்காரருக்கு தெரியாது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று தனது இரு சக்கர வாகனத்தை வாங்கிச்சென்ற பாலமுருகன், தான் பதிவு செய்த ஆடியோவை ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பியதும், சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியது உண்மை தான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை குறித்த அறிக்கையை போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் வாகனத்தை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்