நெல்லை மாவட்டத்தில் 535 நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்காக 535 நடமாடும் வாகனங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-24 18:56 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்காக 535 நடமாடும் வாகனங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

அமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம்தோறும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திற்கு கொரோனா கட்டுப்பாட்டு அமைச்சராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வப்போது நெல்லை மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை பாளையங்கோட்டையில் ஆய்வு செய்தார். ரெட்டியார்பட்டியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு சுகாதார பொருட்களை வழங்கினார். இட்டேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி சேகரிப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நடமாடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

535 காய்கறி வாகனங்கள்

நெல்லை மாவட்டத்தில் 535 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை  தொடங்கி வைத்து உள்ளேன். இதில் நெல்லை மாநகர் பகுதியில் 80 வாகனங்கள், நகராட்சி பகுதிக்கு 18 வாகனங்கள், பேரூராட்சி பகுதிக்கு 115 வாகனங்கள், ஊராட்சி பகுதிக்கு 322 வாகனங்கள் என மொத்தம் 535 வாகனங்கள் முதல் கட்டமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேவையின் அடிப்படையில் கூடுதல் வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த வாகனங்களையும், காய்கறி விற்பனையையும் கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி அரசு விதித்துள்ள விலையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வது கண்காணிக்கப்படும். 

தினமும் காய்கறிகளுக்கான விலை நிர்ணயம் செய்ய வேளாண்மை துறை இணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தினமும் 120 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆக்சிஜன் நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது சீனாவில் இருந்து 20 டன் கொள்ளளவு கொண்ட 12 ஆக்சிஜன் கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் சிங்கப்பூரில் இருந்து 1,500 சிலிண்டர்கள் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளது. விரைவில் தமிழகத்துக்கு அவை கொண்டு வரப்படும். இதுதவிர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையின்படி தைவானில் இருந்து 20 டன் கொண்ட 2️ கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு ஏற்படாது

எனவே தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிப்பதற்கு போதுமான அளவுக்கு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலை ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் மந்திராச்சலம், வேளாண்மை துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்