தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: நாமக்கல்லில் கடைகள் அடைப்பு; முக்கிய சாலைகள் வெறிச்சோடின; 30 சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாமக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டன. 30 இடங்களில் சோதனைச்சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. எனவே தமிழக அரசு வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. லாரிகள் மிக குறைவான அளவே இயக்கப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பஸ்நிலையங்கள் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
கடைகள் அடைப்பு
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, துறையூர் சாலை மற்றும் அனைத்து பகுதிகளிலும் மருந்து கடைகளை தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.
இதேபோல் தனியார் அலுவலகங்களும், பெரும்பாலான அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்பட்டன.
பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், அம்மா உணவகம், வங்கிகள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரித்து அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாவட்ட எல்லைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.