30 சோதனைச்சாவடிகளில் தீவிர தணிக்கை; நாமக்கல் மாவட்டத்தில் 228 வாகனங்கள் பறிமுதல்; ரூ.2¼ லட்சம் அபராதம் வசூல்
நாமக்கல் மாவட்டத்தில் 30 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், 228 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.2¼ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நாமக்கல்:
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் பால் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கியமான அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகன சேவையை பொறுத்த வரையில் ஊரடங்கின் போது மருத்துவ தேவை தவிர, பிற காரணங்களுக்காக வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம் எனவும் அரசு அறிவித்தது.
வாகன தணிக்கை
பள்ளிபாளையம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், மணிசேகரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பஸ் நிலையம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, சங்ககிரி ரோடு காவிரி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த 15 பேரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
இதேபோல் பரமத்திவேலூரில் நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 43 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மளிகை கடைக்கு சீல்
திருச்செங்கோடு நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் ரோட்டில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த மூர்த்தி என்பவரது மளிகை கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஊரடங்கை மீறியதாக 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருச்செங்கோடு ஊரக பகுதியில் 20 மோட்டார் சைக்கிள்களும், எலச்சிபாளையத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோகனூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையில் போலீசார் வேலூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.2¼ லட்சம் வசூல்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றியதாக 2 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 228 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், வாகனங்களில் சுற்றிய நபர்கள், முககவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.