திருப்பத்தூரில் முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன

முழு ஊரடங்கு காரணமாக திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-24 18:17 GMT
திருப்பத்தூர்

கடைகள் மூடப்பட்டன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து இன்றியும், மக்கள் நடமாட்டமின்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

குறிப்பாக எந்த நேரமும் பொதுமக்கள் கூட்டமாக காணப்படும் ஆலங்காயம் மெயின் ரோடு, பஸ் நிலையம், சின்னக்கடைதெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி உள்ளது. பொது மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும், தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து அவ்வழியாக வருபவர்களை விசாரித்து அத்தியாவசிய தேவைக்காக வருபவர்களை மட்டும் செல்ல அனுமதி அளித்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது‌.

போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு,  ஆசிரியர்நகர், ஆலங்காயம்ரோடு, வாணியம்பாடி ரோடு கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் நகரப்பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு  உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை  9442992526 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்