கடலூரில் போலீஸ் சூப்பிரண்டுக்கு டிமிக்கி கொடுக்க முயற்சி திருமணத்துக்கு சென்றுவிட்டு மருத்துவமனைக்கு செல்வதாக ஏமாற்றிய தம்பதி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்ததால் பரபரப்பு

கடலூரில் முழுஊரடங்கின் போது, திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பதி, போலீஸ் சூப்பிரண்டின் வாகன சோதனையில் சிக்கி கொண்டபோது மருத்துவமனைக்கு செல்வதாக கூறினர். இதையடுத்து அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அவர் அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-24 18:16 GMT
கடலூர், 

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 50 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்பு கட்டைகள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த பணிகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கடலூர் அண்ணா பாலம் அருகிலுள்ள சிக்னல் பகுதியில் ஆய்வு செய்தபோது, சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி ஒரே காரில் 5 பேர் வந்தனர், அவர்கள் வந்த காரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது காரில் இருந்த ஒருவர் தனது மனைவிக்கு கண் பரிசோதனைக்காக புதுச்சேரிக்கு செல்ல இருப்பதாக கூறினார். ஆனாலும் காரில் இருந்த பெண்கள் பட்டுச்சேலை, நகைகள் அணிந்து இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு, அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினார். அப்போதும் காரில் வந்த நபர் புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக மீண்டும் கூறினார்.

ஆம்புலன்சில் ஏற்றினர்

ஆனால் விசாரணையில், அவர்கள் சிதம்பரத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு தவளக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்ததும், அந்த உண்மையை மறைத்து மருத்துவமனைக்கு செல்வதாக கூறி டிமிக்கி கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் அந்த காரில் வந்த 3 பேரையும் போலீசார் இறக்கி விட்டு, அங்கிருந்து செல்லுமாறு திருப்பி அனுப்பினர். பின்னர் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறிய தம்பதியை ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் ஏற்றி போலீஸ் சூப்பிரண்டு அனுப்பினார். 

இதை சற்றும் எதிர்பாராத அந்த தம்பதியினர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.  ஆனால் அந்த ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த தம்பதி நாங்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 

திருமணத்திற்கு சென்று வருகிறோம் என்று டிரைவரிடம் கூறி, அங்கிருந்து இறங்கி நைசாக தப்பி சென்றுவிட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்