நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு: கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update:2021-05-24 23:45 IST
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதும் தினசரி ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிகள் உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 15 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் சாதாரண படுக்கைகள் சில காலியாக இருந்து வருகின்றன. ஆனால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின

மூச்சுத்திணறல் ஏற்படும் கொரோனா நோயாளிகளை ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட 144 படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது நோயாளிகளால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
எனவே தற்போது மூச்சுத்திணறலுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுப்பது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் இறந்தாலோ அல்லது யாராவது குணமாகி சென்றால் மட்டுமே படுக்கை வசதி கிடைக்கிறது.

ஆம்புலன்சில் சிகிச்சை

இதனால் மூச்சுத்திணறலுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சிலேயே ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நாட்களில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைப்பதாகவும், அதுவரை காத்திருந்து, நோயாளி படுக்கையில் சேர்க்கப்பட்ட பின்னர் தான் திரும்ப செல்ல முடிகிறது எனவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்