அய்யப்பன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

அய்யப்பன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Update: 2021-05-24 18:05 GMT
கடலூர், 

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோ.அய்யப்பன் (வயது 63). இவருக்கு லீமாரோஸ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன் இணைந்து கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.


மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் உள்ளிட்டவற்றையும், ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவர் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

 இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அய்யப்பன் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, தி.மு.க. நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்