வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
வந்தவாசி-
மணல் கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அருகே உள்ள சுகநதி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீஸ் ஏட்டு குமார் உள்ளிட்ட கீழ்க்கொடுங்காலூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்றனர்.
அப்போது அங்கு ஒரு கும்பல் மணல்கடத்தலில் ஈடுபட்டது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரியில் தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
போலீஸ்காரருக்கு அரிவாள்வெட்டு
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் போலீஸ் ஏட்டு குமாரின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் போலீஸ்காரர் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். "
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், வந்தவாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலீஸ்காரரை வெட்டிவிட்டு தப்பியோடியவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.