ஒரே நாளில் 1808 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

Update: 2021-05-24 17:42 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
1,808 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. தமிழகம் முழுவதும் தற்போது ஒரு வாரம் முழு ஊரடங்கையும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 34 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
48 ஆயிரத்து 697-ஆக உயர்வு
இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களை கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், அவ்வாறு மீறி வெளியே வருகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 697-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 558 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 647-ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரத்து 711 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
5 பேர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் நேற்று பலியாகினர். அதன்படி திருப்பூரை சேர்ந்த 50, 66 வயது ஆண்கள் மற்றும் 28 வயது பெண் ஆகியோர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 62 வயது ஆண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 70 வயது ஆண் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 339-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை போல் தற்போது பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்